உலக அளவில் வலிமையான கடப்பிதழ் வரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. விசா இல்லாமல் 192 இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் கடப்பிதழ் என்ற முறையில் இரண்டாவது இடத்தை தென்கொரியாவுடன் சிங்கப்பூர் பகிர்ந்துகொள்கிறது. ஜப்பானிய கடப்பிதழ் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த நாட்டின் கடப்பிதழ் மூலம் 193 இடங்களுக்குள் விசா இன்றி நுழையமுடியும்.
உலகக் குடிமக்கள் மற்றும் வசிப்பிடத்திற்கான ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் தொகுத்துள்ள உலகளாவிய குறியீட்டில் இந்தக் கடப்பிதழ் தரவரிசை இடம்பெற்று உள்ளது. 2021 அக்டோபரில் 192 இடங்களுக்கு விசா எதுவுமின்றி செல்ல வழிவகுக்கக் கூடிய கடப்பிதழ் என்ற முறையில் சிங்கப்பூரும் ஜப்பானும் ஆக உயரிய இடத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தன.
உலக நாடுகளின் 199 கடப்பிதழ்களையும் 227 பயண நகரங்களையும் ஒப்பிட்டு ஹென்லி கடப்பிதழ் குறியீடு வகுக்கப்படுகிறது. அனைத்துலக விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கணக்கீடு நடத்தப்படுகிறது.
இந்தியக் கடப்பிதழ் இக்குறியீட்டில் 85வது இடத்தில் உள்ளது. அக்கடப்பிதழைக் கொண்டு 59 இடங்களுக்கு விசா எதுவுமின்றி செல்லலாம். 2019, 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் இந்தியக் கடப்பிதழ் முறையே 82வது, 84வது, 85வது, 83வது இடத்தில் வந்தது.
குறியீட்டின் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் கடப்பிதழ் உள்ளது. இந்த நாட்டின் கடப்பிதழைக் கொண்டு 27 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி செல்லமுடியும்.
கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகமான நாடுகள் தங்களது எல்லைகளைத் திறந்திருக்கும் வேளையில் ஆக அண்மைய கடப்பிதழ் தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது.
உலகளாவிய பயணங்கள் கொவிட்-19க்கு முந்திய நிலையில் முக்கால்வாசியை எட்டி உள்ளதாக ஹென்லி அண்ட் பார்னர்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் நடப்பில் இருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை சீனா கடந்த ஞாயிறன்று தளர்த்தியது.
சீனாவுக்குள் நுழையும் பயணிகளுக்கான தனிமையுத்தரவை அது ரத்து செய்துவிட்டது. சீனாவில் இறங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொவிட்-19 கிருமிக்கான பிசிஆர் பரிசோதனையில் தொற்றில்லை என்று இருந்தால் மட்டும் போதுமானது; உலக மக்கள் தாராளமாக தங்களது நாட்டுக்குள் நுழையலாம் என்று சீனா அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னர், சீனா செல்வோர் முதல் ஐந்து நாள்கள் ஹோட்டலிலோ பிற தங்குமிடத்திலோ தனிமையில் இருக்கவேண்டும்; அடுத்த மூன்று நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்டதன் விளைவாக அடுத்த மூன்று மாதங்களில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் குறைந்தபட்சம் நான்கு வர்த்தகச் சந்திப்புக் கூட்டங்கள் நிகழ உள்ளன.

