சிங்கப்பூர் எல்லை தொடர்பான நடவடிக்கைகளைத் தேவைப்பட்டால் அதிகரிக்கத் தயாராய் இருப்பதாகவும் உலகத்தில் கொவிட்-19 நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இருந்தபோதும், சீனா அதன் எல்லைகளை வரும் ஜனவரி 8ஆம் தேதி திறக்கவுள்ள நிலையில், சிங்கப்பூரின் தற்போதைய கொவிட்-19 நடவடிக்கைகளில் மாற்றமில்லை என்று அது தெரிவித்தது.
சிங்கப்பூருக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பயணிகள் நுழைந்தால், பயணத்துக்கு இரண்டு நாளுக்கு முன்னால் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த விதிமுறை ஏற்கெனவே நடப்பில் உள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாது இங்கு வரும் குறுகிய காலப் பயணிகள், குறைந்தது $30,000க்கு கொவிட்-19 தொடர்பான செலவுகளுக்கான காப்புறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
விமானம், கடல் வழியாக வருபவர்கள் உடல்நிலை குறித்த உறுதிமொழி ஆவணத்தை ஒப்படைக்கவேண்டும்.
சீனாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் சீனாவிலிருந்து செல்லும் எல்லாப் பயணிகளுக்கும் பரிசோதனைகளை அறிவித்துள்ளன.
எக்ஸ்பிபி கிருமி வகையால் அலை ஏற்பட்டு ஓய்ந்தபோதும், உள்ளூர் தொற்று நிலவரம் நிலையாக இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
"தொற்றை முழுமையாக நிறுத்த முடியாது. கிருமி நமது சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஆனால் தொற்றால் குறைவானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் கடுமையாக நோயுறுவதையும் நாம் உறுதி செய்ய முடியும்," என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரின் ஏழுநாள் உள்ளூர் தொற்றுச் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 729.100க்கும் குறைவானவர்கள் கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பத்துக்கும் குறைவானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சு விவரித்தது.

