சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகப் பயணிகள் இங்குள்ள சிறப்புகளை இலவசமாக அனுபவிக்க ஏதுவாக ஒரு புதிய செயல்திட்டத்தை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தொடங்கி இருக்கிறது.
'சிங்கப்பூர் வெகுமதிகள்' எனக் குறிப்பிடப்படும் அந்தப் புதிய செயல்திட்டம் இந்த ஆண்டு முழுவதும் இடம்பெறும்.
இங்கு வரும் அனைத்துலகப் பயணிகள் ஏறக்குறைய 40 புதிய அல்லது அவ்வளவாக வெளியே தெரியாத அனுபவங்களில் ஏதாவது ஒன்றை இலவசமாக அனுபவித்து மகிழலாம். இந்த விவரங்களை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
குறுகியகால பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வருவோர், சிங்கப்பூர் வெகுமதிகள் அடங்கிய ஒரு சிறப்புப் பட்டியலில் இருந்து இலவசமாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
அந்த அனுபவங்கள் அவ்வளவாக வெளியே தெரியாத இடங்களை எடுத்துக்காட்டுபவையாக இருக்கும் அல்லது அவை சிங்கப்பூருக்கே உரிய தனிச்சிறப்புமிக்க அனுபவங்களை வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக அந்த அனுபவங்கள் சிங்கப்பூரை பற்றிய புதிய ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிறகும் சிங்கப்பூர் பற்றிய அந்தக் கண்ணோட்டம் பயணிகளின் மனத்தில் நிலைத்து நிற்கும்.
புதிய செயல்திட்டம் தொடர்பான முன்பதிவுகளையும் இலவச சலுகையையும் 'விசிட்சிங்கப்பூர்' செயலியில் செய்துகொள்ளலாம். அல்லது https://singaporewards.visitsingapore.com/en என்ற இணையத்தளத்தை நாடலாம்.
சிங்கப்பூர் வெகுமதிகள் செயல்திட்டம் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியாவில் வெற்றிகரமான முறையில் முன்னோடித் திட்டமாக இடம்பெற்று இருக்கிறது. இப்போது அனைத்துலக பயணிகளுக்கு அது நீட்டிக்கப்படுகிறது.

