சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணிகள் வருகை ஏறுமுகம்

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணிகள் வருகை ஏறுமுகம்

2 mins read
4eff2d64-380f-4ddd-b7d5-e67c0a68c1fc
சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகளின் பட்டியலில், இந்தியாவுக்கு மூன்றாம் இடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் தொடர்ந்து ஒரு மில்லியனைத் தாண்டியது. 2023ல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அந்த எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது. அதோடு, 2020ல் கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து சுற்றுப்பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியிருப்பது இது இரண்டாவது முறை.

கடந்த ஏப்ரலில் இங்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1.13 மில்லியனுக்குக் கூடியது. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 1.02 மில்லியனைக் காட்டிலும் இது அதிகம்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமை (மே 22) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இது தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை, கிருமிப்பரவலுக்கு முன்னர் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவான 1.7 மில்லியனைவிட குறைவாக இருந்தாலும், கிருமிப்பரவலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகளின் பட்டியலில், இந்தோனீசியா 13ஆவது மாதமாக முன்னணி வகிக்கிறது. சிங்கப்பூருக்கு வந்த இந்தோனீசிய சுற்றுப்பணிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் 220,067ஆகப் பதிவானது. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 171,507ஐ விட அது அதிகம்.

அடுத்தபடியாக, பட்டியலில் இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது, மலேசியா. அங்கிருந்து, 98,190 வருகையாளர்கள் சிங்கப்பூர் வந்திருந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 97,835ஐ விட அது அதிகம்.

தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக மூன்றாம் இடத்தில் வந்தது, இந்தியா. ஏப்ரலில் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 97,029. அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 75,338ஐ காட்டிலும் அது அதிகம்.

அதோடு, இந்தியாவிலிருந்து இங்கு வந்தோர் எண்ணிக்கை, ஏப்ரலில் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களின் எண்ணிக்கையைவிடவும் (92,937) அதிகம். கடந்த மார்ச் மாதம் 74,268 சுற்றுப்பயணிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்திருந்தனர்.

கடந்த ஏப்ரலில் 90,275 சுற்றுப்பயணிகளுடன் சீனா மீண்டும் ஐந்தாம் இடத்தில் இடம்பெற்றது. மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 60,888ஆக இருந்தது.