இன்றைய நிச்சயமற்ற உலகத் தோற்றத்தில் ஜி20 அமைப்பை ஏற்றுநடத்தும் இந்தியாவின் முன்னுரிமைகளுக்கு சிங்கப்பூர் வலுவான ஆதரவை வழங்கும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை 2022 டிசம்பர் 1 முதல் இவ்வாண்டு நவம்பர் 30 வரையிலான ஓராண்டு காலத்திற்கு இந்தியா வழிநடத்தும்.
தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய, ஆர்வம் நிறைந்த, செயல் சார்ந்த மற்றும் தீர்க்கமான நிகழ்ச்சிநிரலை ஜி20 உச்சநிலைக் கூட்டத்தில் முன்வைக்கும் என்று சிங்கப்பூர் நம்பிக்கையுடன் இருப்பதாக திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்று நடத்திய இந்தியாவின் 74வது குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு கான் பேசினார்.
"ஜி20 தலைமை ஏற்றிருக்கும் இந்தியா உலக நாடுகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிநிரலைத் தயாரிக்கும் முக்கிய பணியில் ஈடுபட உள்ளது," என்றார் அவர்.
கொள்ளைநோய்க்குப் பிறகு இதுபோன்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் மீண்டும் நிகழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திரு கான் கூறினார்.
ஜி20 என்பது உலகின் முன்னணியில் உள்ள 20 நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். பெரும்பாலும் உலகின் பெரிய, வளரும், வளர்ந்த பொருளியல் நாடுகளை உள்ளடக்கியது இந்த அமைப்பு.
'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்' என்னும் கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான உச்சநிலைக் கூட்டத்தை இந்தியா நடத்தத் திட்டமிட்டு உள்ளது. அதனைத் தொட்டுப் பேசிய அமைச்சர் கான், "இன்றைய நிச்சயமில்லா உலகில் நாம் எதிர்நோக்கும் பொதுவான சவால்களைச் சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை இந்தக் கருப்பொருள் உணர்த்துகிறது," என்றார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்காப்பு, வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் காலங்காலமாக அணுக்க உறவு இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பு மென்மேலும் வலுவடைந்து வருவதாகக் கூறினார்.
இந்தியாவின் ஆகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக சிங்கப்பூர் விளங்குவதாக திரு கான் சொன்னார். சிங்கப்பூர் நிறுவனங்கள் 2005ஆம் ஆண்டு US$1.3 பில்லியன் முதலீடு செய்திருந்ததாகவும் அது படிப்படியாக வளர்ந்து 2020ஆம் ஆண்டு US$6 பில்லியனை எட்டியதாகவும் கூறிய அவர், 15 ஆண்டுகளில் 50 மடங்கு முதலீட்டு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 440 நிறுவனங்கள் இந்தி யாவில் இயங்குகின்றன.
அதேபோல இந்தியாவின் நிறு வனங்கள் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிநாட்டு வர்த்தகக் குழுக்களாக உள்ளன.

