ஜோகூர் பாரு சோதனைச்சாவடிகளில் சிங்கப்பூரர்களும் இனி மின்-நுழைவாயிலைப் பயன்படுத்தலாம்

ஜோகூர் பாரு சோதனைச்சாவடிகளில் சிங்கப்பூரர்களும் இனி மின்-நுழைவாயிலைப் பயன்படுத்தலாம்

2 mins read
80e94b73-e639-41a8-8623-62d578e2f5b3
இரு சோதனைச் சாவடிகளிலும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் குறுகியகால தீர்வுகளில் இதுவும் ஒன்று. படம்: பெர்னாமா -

ஜோகூர்பாருவில் உள்ள இரு தரைவழி நுழைவுவாயில்களில் மின்னணு வாயில் (இ-கேட்) வசதிகளை சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷோன் இஸ்மாயில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) அறிவித்துள்ளார்.

"இதற்கு முன்னர் மலேசிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த மின்-நுழைவாயில்களைப் பயன்படுத்த முடிந்தது.

"இன்று முதல் மின்-கடவுச்சீட்டைப் பயன்படுத்தும் சிங்கப்பூரர்களுக்கும் மின்-நுழைவாயிலைப் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறோம்," என்று திரு சைபுதீன் கூறியதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு சோதனைச் சாவடிகளிலும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் குறுகியகால தீர்வுகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.

சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தின் சுங்கச்சாவடி, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ஜோகூர் கடற்பாலத்தில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பது' பற்றிய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர், திரு சைபுதீன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மின்-நுழைவாயில் வசதியைப் பயன்படுத்த விரும்பும் சிங்கப்பூரர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதம் செல்லுபடியாகும் மின்-கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் வருகையாளர்கள் பயணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் மலேசிய மின்னிலக்க வருகை அட்டையை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சைபுதீன் கூறினார்.

முதல் முறையாகச் செல்வோர் சுங்கச்சாவடி முகப்பில் தங்கள் அங்க அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

திரு சைபுதீன் அரசாங்க அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ஜோகூர் கடற்பாலத்தை பார்வையிட்டார்.

புருணை, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற குறைந்த கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் மின்-நுழைவாயில் பயன்பாட்டை குடிநுழைவுத் துறை விரிவுபடுத்தும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தகுதியுள்ள மலேசியர்களுக்குத் தானியக்க வாயில் வசதியை வழங்குகிறது.

தகுதிபெற்ற மலேசியக் குடிமக்கள், சிங்கப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தானியங்கி தடங்களைப் பயன்படுத்துவதற்கு பதிவு செய்துகொள்ளும் வசதியை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஐசிஏ செயல்படுத்தியுள்ளது.

சோதனைச்சாவடியின் சோதனை முகப்புகளில் குடிநுழைவு அனுமதியின்போது இதற்கான பதிவு தானாகவே செய்யப்படும்.

அவ்வாறு பதிவு செய்தோருக்கு அவர்கள் 'எஸ்ஜி வருகை அட்டை'யில் தெரிவித்திருந்த மின்னஞ்சலுக்கு மின்னிலக்க வருகை அட்டை வழியாகத் தெரிவிக்கப்படும்.

முன்னதாக, தகுதியுடைய மலேசிய குடிமக்கள் தானியங்கி வாயில் பயன்பாட்டிற்காக பதிவுசெய்ய முகப்பு பதிவு மையங்களை அணுக வேண்டியிருந்தது.