செய்தித்தாள் விநியோக எண்ணிக்கை மிகைப்படுத்திக் காட்டப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினையை தீர ஆராயும்படி தனது கணக்காய்வு, இடர்ப்பாட்டுக் குழுவை எஸ்பிஹெச் ஊடக நிறுவனத்தின் இயக்குநரவை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் எனப் பரிந்துரைக்கும்படியும் அது கூறியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் சில மாதங்களில் சராசரியாக 90,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட தரவுகள் காட்டியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பலத்த விமர்சனங்களுக்கு ஆளான அந்த நிறுவனம் இதன்தொடர்பில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இதைக் குறிவைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றது அது. இதில் சட்ட வல்லுநர்களின் உதவியையும் நாட கணக்காய்வு, இடர்ப்பாட்டுக் குழு முடிவெடுத்துள்ளது.
விசாரணையில் தெரியவருபவை எஸ்பிஹெச் ஊடக நிறுவனத்தின் இயக்குநரவைக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும்.
இதுபற்றி மேலும் தகவல் தந்த எஸ்பிஎச் ஊடக நிறுவனம், இதில் குறிப்பாக எது கவலையளிக்கிறது என்றால், சராசரியாக அன்றாடம் 49,000 செய்தித்தாள் பிரதிகள் விநியோகிக்கப்பட்டதாக காட்டும் மிகைப்படுத்தப்பட்ட தரவுகள்தான் என்று அந்த நிறுவனம் விளக்கியது.
இது மொத்த விநியோக எண்ணிக்கையில் 5% என்பதும் இந்த மிகைப்படுத்தப்பட்ட விநியோகத் தரவுகளில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இவை விநியோகிக்கப்படவில்லை என்றபோதும் விநியோகிக்கப்பட்டதாக தரவுகள் காண்பிப்பதாகவும் இதில் பெரும்பாலானவை மின்னிலக்கப் பிரதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

