சிங்கப்பூரால் எப்போதும் முடங்கி இருக்கவும் முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
பிரதமர் நேற்று (அக்டோபர் 23ஆம் தேதி) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்தார்.
"கொவிட்-19 கிருமியுடன் பாதுகாப்பாக வாழும் நிலையை அடைவதற்கு இப்பாதையில் சென்றாக வேண்டும். முடிந்தவரை குறைந்த இழப்புகளுடன் இந்நிலையை அடைய விரும்புகிறோம்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
பெருந்தொற்றைக் கையாள அமைச்சுநிலைப் பணிக்குழு வகுத்துள்ள நடைமுறைகள், இதை அடைவதற்கான சிறந்த வழியைப் பிரதிபலிக்கிறது என்றார் பிரதமர்.
சிங்கப்பூர் கூடுதல் செயல்பாடுகளைப் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்குவதற்கான புதிய நடவடிக்கைகளை பணிக்குழு நேற்று அறிவித்தது.
அத்துடன் வாராந்திர நோய்த்தொற்று வளர்ச்சி விகிதம் ஒன்றுக்குக் கீழே சென்றால், மேலும் சில கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் அது கூறியிருந்தது. கடந்த ஒரு வாரத்தில் ஏற்படும் சமூக அளவிலான தொற்றுக்கும் அதற்கு முந்தைய வாரத்துக்கும் இடையிலான விகிதமே வாராந்திர நோய்த் தொற்று வளர்ச்சி விகிதம். இது கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று பிரதமர் வலியுறுத்தினார்.
இரண்டு வாரத்துக்கு முன்னர் இந்த விகிதம் 1.5 ஆக இருந்தது.
அதாவது இரண்டு வாரத்துக்கு ஓரு முறை கிருமித் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது.
தற்போது அந்த விகிதம் 1.15 ஆக உள்ளது. ஒவ்வொரு வாரமும் தொற்றுச் சம்பவங்கள் 15% கூடுகின்றன என்பது இதன் பொருள். இந்த விகிதத்தில் தொற்றுச் சம்பவங்கள் இரட்டிப்பாவதற்கு ஒரு மாதம் பிடிக்கிறது.
நோய்த்தொற்று வளர்ச்சி விகிதம் ஒன்றுக்குக் கீழே குறைந்து, மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் உள்ள நிலை சீராக இருந்தால், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சிலர் கட்டுப்பாடுகளால் எரிச்சல் அடைந்துள்ளதையும் வேறு சிலர் துரிதமாக தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக நினைத்து கவலைப்படுவதையும் திரு லீ சுட்டிக்காட்டினார்.
மக்களின் உணர்வுகள் தமக்குப் புரிவதாகவும் தொடரும் குழப்பமும் தடைகளும் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை தாம் அறிவதாகவும் பிரதமர் லீ கூறினார்.
அனைவரும் தங்கள் பங்கைத் தொடர்ந்து செய்து, சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

