புக்கிட் மேரா சந்தையில் மாண்டுகிடந்த ஆடவர்

புக்கிட் மேரா சந்தையில் மாண்டுகிடந்த ஆடவர்

1 mins read
bfe591ac-997b-444e-a074-96a35117b248
ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்றும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்தது. படம்: ஷின் மின் -

புக்கிட் மேரா வியூ புளோக் 115ல் உள்ள புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருள்களை விற்கும் ஒரு கடையில் 49 வயது ஆடவர் ஒருவர் சனிக்கிழமை (ஏப்ரல் 15) மாண்டுகிடந்தார்.

அவர் அந்தக் கடையின் உதவியாளர் என்றும் அவர் கடையில் சுயநினைவின்றி கிடந்ததாகவும் சீன மொழி நாளிதழ் ஷின்மின் தெரிவித்தது.

கடை உரிமையாளராலும் அவருடைய நண்பர் ஒருவராலும் காலை 6 மணியளவில் அந்த ஆடவரை எழுப்பிவிட முடியவில்லை. அந்த நண்பர் அந்த ஆடவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சந்தையில் மீன் விற்கும் திருவாட்டி லிம், அதிகாலை 3 மணியளவில் தமது கடையைத் திறந்தபோது அந்த ஆடவர் கடையில் படுத்த நிலையில் இருந்ததை தாம் கண்டதாக ஷின்மின் நாளிதழிடம் கூறினார்.

ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்றும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்தது.