ஜூரோங் தீவில் நேற்று எண் 23 தெம்புசு ரோட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் பிற்பகல் 3 மணிக்கு தீ மூண்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது. அதில் 40 மீட்டர் விட்டம் அளவு, 20 மீட்டர் உயரமுள்ள கச்சா எண்ணெய் இருந்த அந்தக் கிடங்கில் தீ மூண்டதாகக் கூறியது. குடிமைத் தற்காப்புப் படை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த எண்ணெய்க் கிடங்கு நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. தீயின் கடுமையினால் அந்த எண்ணெய்க் கிடங்கு சரிந்தது. "கடுமையான மழை பெய்து கொண்டிருந்தபோதும் தீப்பிழம்பும் கரும்புகையும் வானத்தை நோக்கிச் செல்வது காண்பதற்கு படுமோசமாக இருந்தது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார் கட்டுமான ஊழியர் ரவி சாமிநாதன்.
ஜூரோங் தீவில் எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது
1 mins read
-

