இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதி இரு எஸ்எம்ஆர்டி ஊழியர்களின் மரணத்திற்குக் காரணம் முக்கிய மான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியுள்ளது. இதன் தொடர்பிலான தனது விசாரணை முடிந்துவிட்டதாக நேற்று தெரிவித்த எஸ்எம்ஆர்டி நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் நஸ்ருலுதின் நஜுமுதின், வயது 26, முகம்மது அஸ்ரியாஃப், வயது 24 என்ற அந்த ஊழியர்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக் கலாம் என்று தெரிவித்தது. எம்ஆர்டி ரயில் தடங்களில் வேலை செய்ய ஒரு குழு செல்வதற்கு முன்னர் அதற்கான பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ரயில் தடத்தில் வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு பூஜ்யம் கிலோ மீட்டர் எனக் குறைப்பது, அந்தத் தடத்தில் தானியங்கி முறையில் செயல்படும் எந்த ரயில் வண்டியும் வராது உறுதி செய்வதுடன் அங்கு ரயில்கள் வருகின்றனவா என்பதைக் கண்காணிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளை நிறுத்துவது ஆகியவை பாதுகாப்பு விதிமுறைகளில் அடங்கும். இந்த விசாரணையை மேற் கொண்ட எஸ்எம்ஆர்டியின் விபத்து ஆய்வுக் குழுவில், நிறுவனத்தின் அபாயங்கள் குறித்து ஆராயும் குழுவினருடன் கெப்பல் கார்ப்பரேஷன், லண்டன் பெருவிரைவு ரயில்களை இயக்கும் 'டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன்' நிறுவனம் ஹாங்காங் பெருவிரைவு ரயில்வே கார்ப்பரேஷனைச் சேர்ந்த மூன்று சுயேச்சை நிபுணர்களும் இடம்பெற்றிருந்தனர்.

