முஹம்மது ஃபைரோஸ்
பக்தர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகமாக அனைவரையும் ஒன்றிணைப்பது வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ள முக்கியப் பொறுப்பு என்று தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பொங்கோல் வட்டாரத்தில் அமைந்துள்ள அல்=இஸ்லாஹ் பள்ளிவாசலில் நேற்று பிரதமர் லீ சியன் லூங்குடன் இஃப்தார் எனும் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர் யாக்கூப் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். "புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பிரதமர் பாராட்டினார்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய பள்ளிவாசலான அல்=இஸ்லாஹ் பள்ளிவாசல் பொங்கோல் வட்டாரத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்திருப்பதை அவர் வரவேற்றார்," என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் யாக்கூப். இஸ்லாமிய சமயம் அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சமயமாகத் திகழ்வதை மெய்ப்பிக்கும் வகையில் பள்ளிவாசல் எல்லாரையும் திறந்த கரங்களுடன் வரவேற்பதாகவும் அவர் கூறினார். "நோன்புத் திறப்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்கள். நோன்புக் கஞ்சி விநியோகிக்கும்போது முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கஞ்சி கொடுக்கிறோம். இஸ்லாமிய சமயம் எல்லாரையும் அனுசரிக்கும் சமயம் என்பதைக் காட்ட விரும்புகிறோம்," என்றார் டாக்டர் யாக்கூப். நேற்றைய நோன்புத் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ அல்=இஸ்லாஹ் பள்ளிவாசலின் நவீன வசதிகளைப் பார்வையிட்டார். அவருடன் சமயத் தலைவர்களும் அடித்தளத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
பொங்கோல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஓராண்டு பூர்த்தியான அல்-இஸ்லாஹ் பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங், தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் ஆகியோர் நோன்புக் கஞ்சியை கிண்ணங்களில் ஊற்றுகின்றனர். படம்: பெரித்தா ஹரியான்

