ரியோ டி ஜெனிரோ: எதேச்சைபாணி நீச்சலில் உலகின் தலை சிறந்த வீரர்களுடன் களத்தில் குதித்த சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்பூர் விளையாட்டு வரலாற்றில் தடம் பதிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார். நேற்று காலை சுமார் 9 மணியளவில் 100 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலின் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் 21 வயது ஸ்கூலிங்கால் எட்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இரண்டு அரையிறுதிகளிலும் போட்டியிட்ட 16 வீரர்களில் அவர் கடைசியாக போட்டியை முடித்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் 48.7 விநாடிகள்.
இறுதிச் சுற்றுக்கு ஸ்கூலிங் தகுதிபெறத் தவறியது சிங்கப்பூரர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்த தென்றால், அப்போட்டியில் உலக வெற்றியாளரான சீனாவின் நிங் ஸெடாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் சிங்கப்பூர் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவதே ஸ்கூலிங்கின் இலக்காக இருந்தது. இதற்குமுன், ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமையை 2008ஆம் ஆண்டு வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தௌ லி பெற்றிருந்தார். சீனாவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் ஐந்தாவதாக வந்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் சிங்கப்பூர் ஆடவர் என்ற பெருமையைப் பெறும் இலக்கைத் தவறவிட்ட வருத்தத்தில் ஸ்கூலிங். படம்: ராய்ட்டர்ஸ்

