முதல்வன் தங்கப் புதல்வன்

முதல்வன் தங்கப் புதல்வன்

2 mins read
da291ae9-e068-46d0-a686-d602e83f1b33
-

சிங்கப்பூர் வரலாற்றில் நேற்றைய நாள் ஒரு பொன்னாள்! 21 வயதான ஜோசஃப் ஸ்கூலிங் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்து விளையாட்டுத் துறையில் சிங்கப்பூரின் சாதனைப் பயணத்திற்கு அச்சாரமிட்ட நாள்! சிறிய நாட்டில் இருந்து வந்தாலும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதும், எத்தனை வல்லவர்கள் எதிர்த்து நின்றாலும் வெற்றியைத் தனதாக்கி மணிமகுடம் சூடலாம் என்பதற்கு மிகப் பெரிய முன்னுதாரணமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார் ஸ்கூலிங். இதற்குமுன் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்த சிங்கப்பூருக்குத் தங்கம் மட்டும் ஏனோ வந்து சேரவில்லை. அந்த ஏக்கத்தைப் போக்கிய ஸ்கூலிங், புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்து தமது பெயரைப் பொன்னேட்டில் இடம் பெறச் செய்தார். நீச்சலில் சாதிக்கவேண்டும் என்பதற் காக தமது 14 வயதிலேயே பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற ஸ்கூலிங், தமது ஏழு ஆண்டுகால கடும் உழைப்பிற்கான பலன்களைஅறுவடை செய்யத் தொடங்கி விட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களை வென்று மிகச் சிறந்த விளையாட்டாளராகப் போற்றப்படும் அமெரிக்காவின் மைக்கல் ஃபெல்ப்ஸ், நடப்பு உலக வெற்றியாளரான தென்னாப் பிரிக்காவின் சாட் லி குளோஸ், ஐந்து முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான ஹங்கேரின் லாஸ்லோ சே ஆகிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் 50.39 வினாடிகளில் பந்தய தூரத்தை முதலாவதாகக் கடந்த ஸ்கூலிங், முந்தைய சாதனையையும் தகர்த்தெறிந்தார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூர் விளையாட்டாளர் எனும் பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். மேற்குறிப் பிட்ட மற்ற மூன்று போட்டியாளர்களும் 51.14 வினாடிகள் எனும் ஒரே நேரத்தில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது வியப்பிலும் வியப்பான அம்சம்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய ஸ்கூலிங், "இந்தத் தருணம் எனக்கானது அல்ல. இது எனது நாட்டிற்குரியது!" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் புதிய சாதனையுடன் தங்கத்தைத் தன்வசமாக்கியதை நம்பமுடியாத வியப்பில் சிங்கப்பூரின் ஜோசஃப் ஐசக் ஸ்கூலிங். படம்: ஏஎஃப்பி