தங்கம் வென்றதன் மூலம் சிங்கப்பூரை ஒலிம்பிக் நீச்சல் சாதனை யின் உச்சிக்குக் கொண்டு சென்ற ஜோசஃப் ஸ்கூலிங் இன்று தாயகம் திரும்புகிறார். ஒலிம்பிக் போட்டி நடந்த பிரேசிலிலிருந்து SQ67 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 5.30 மணிக்குச் சாங்கி விமான நிலையத்தில் அவர் வந்திறங்குவார் என்று அறி விக்கப்பட்டது. சாவ் பாலோ, பார்சிலோனா ஆகிய இரு இடைநிறுத்தங்கள் வழியாக 24 மணி நேர விமானப் பயணத்தின் முடிவில் அவர் சிங்கப்பூர் வந்தடைவார். இந்த நாளிதழ் உங்கள் கைகளில் தவழும்போது ஸ்கூலிங் இங்கு வந்து சேர்ந்திருப்பார். சனிக்கிழமை காலை நடந்த 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் இறுதிச்சுற்றில் 100 மீட்டர் தூரத்தை 50.39 விநாடி களில் நீந்தி தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த 21 வயது ஸ்கூலிங்கால் புகழின் உச்சிக்குச் சிங்கப்பூர் சென்றது.
மக்கள்தொகையில் பெருத்த பல நாடுகள் தங்கப்பதக்கக் கனவில் மிதக்கும் வேளையில் உலகில் ஒரு புள்ளியாக இருக் கும் சிங்கப்பூர் தங்கப்பதக்கம் பெற்றதைக் கண்டு ஒட்டுமொத்த ஒலிம்பிக் அரங்கே வியந்தது. குறிப்பாக, நீச்சல் பெருவீரன் மைக்கல் ஃபெல்ப்சையே அவர் வெற்றி கொண்டது மற்றொரு சாதனை. அத்தகு பெருமையை நிலை நாட்டிய நீச்சல் வீரனை வரவேற்க சாங்கி விமான நிலை யத்திற்கு டாக்சியில் செல்ல சலுகைக் கட்டணத்தை கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் அறி வித்தது. அதன் கைபேசிச் செயலியில் '5039' என்னும் சலுகை சங்கேத எண்ணைப் பதிவு செய்தால் 10 வெள்ளிக்குச் சாங்கி விமான நிலையம் செல்லலாம் என்பதே அச்சலுகை. முதலில் வரும் ஆயி ரம் பேருக்கே இச்சலுகை. அத் துடன் கம்ஃபர்ட் டெல்குரோவின் 17,000 டாக்சிகளும் நேற்று பிற் பகல் முதல் "Our Pride J Schooling" என்னும் வாசகங் களைத் தங்களது உச்சத் திரையில் காட்சிப்படுத்தி வருகின்றன. ஒருவார காலத்திற்கு இந்தப் பெருமை போற்றும் வாசகங்கள் இடம்பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சிங்கப்பூர் திரும்பும் ஸ்கூலிங் தமது தாயாருடன் விமானத்தினுள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

