சிங்கப்பூரின் நீண்டகால அதிபராக சேவையாற்றி கடந்த திங்கட்கிழமை இன்னுயிர் நீத்த திரு எஸ் ஆர் நாதனின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற இல்லத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம், திரு நாதனுக்கு நெருங்கிய தொடர்புடைய சிட்டி ஹால், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், என்டியுசி மையம் ஆகிய இடங்கள் வழியாகச் சென்று பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நிறைவடையும் என்று இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கை தெரிவித்தது.
பிறகு பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திரு நாதனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இறுதி ஊர்வலத்தின்போது சாலை யின் இருபுறமும் உள்ள நடைபாதை களில் பொதுமக்கள் பாதுகாப்பாக அணி வகுத்து நிற்கும்படியும் ஊர்வலத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படும் படியாக எந்த ஒரு பொருளையும் வீசவோ அல்லது ஆளில்லா விமானங்களை இயக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இறுதிச் சடங்கில் திரு நாதனின் குடும்பத்தார், அதிபர், பிரதமர், அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கின்போது பிரதமர் லீ சியன் லூங், பேராசிரியர் டாமி கோ, திரு ஸைனல் அபிதின் ரஷீத், திருவாட்டி ஜென்னி சுவா, திரு ராமசுவாமி அத்தப்பன், திரு சான் சுன் சிங், திரு கோபிநாத் பிள்ளை ஆகியோர் புகழுரை ஆற்றவிருக்கின் றனர்.
நாடாளுமன்ற இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே. உடன் அவரது துணைவியார் அகி (இடமிருந்து 2வது) பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

