சிங்கப்பூரில் ஸிக்கா தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட 115 பேரில் 57 பேர் சிங்கப்பூரில் வசிக்கும், வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த 15 பேர் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிங்கப்பூரில் ஸிக்கா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பங்களாதேஷியர்கள், 23 சீன நாட்டவர்கள், ஆறு மலேசியர்கள், ஒரு இந்தோனீசியர், ஒரு மியன்மார் நாட்டவர், சீன தைப்பேயைச் சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சு கூறியது. "பெரும்பாலானோருக்கு சாதா ரண உடல்நலக்குறைவுதான் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குணமடைந்துவிட்டனர். மற்றவர்கள் நல்லபடியாக உடல்நலம் தேறி வருகின்றனர்," என அமைச்சு குறிப்பிட்டது.
இந்நிலையில், கொசுக்களை ஒழிப்பதில் சிங்கப்பூரர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண் டுள்ளார். "தற்போது அல்ஜுனிட், பிடோக் வட்டாரங்களில்தான் நோய் தொற்று உள்ளது. ஆனால் சிங்கப்பூரின் மற்ற இடங்களில் ஸிக்கா இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். சிங்கப்பூர் எங்கும் கொசுவை ஒழித்து, அவை பெருகும் இடங்களை அழிப்பதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையாகும்," என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ் புக்கில் கூறியுள்ளார். சிங்கப்பூரில் முதல் ஸிக்கா தொற்று பாதிப்பு அல்ஜுனிட் பகுதியில் வேலை பார்த்து, வசித்து வரும் மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் ஸிக்கா தொற்றியோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்திருப்பதாக புதன்கிழமை இரவு அமைச்சு கூறியது. பாதிக்கப்பட்டோரில் அல்ஜுனிட் கிரசென்ட், சிம்ஸ் டிரைவ் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர்.
பிடோக் நார்த் அவென்யூ 3ல் உள்ள புளோக் 404ல் உள்ள வீட்டின் சமைய லறையில் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி ஒருவரும் பூச்சிக் கொல்லி ஊழியரும் பார்வை இடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

