வேலையிட மரணங்கள் 40 விழுக்காடு அதிகரிப்பு

1 mins read
19085566-9ba7-40c1-bc0c-5b0747f018cd
-

இவ்வாண்டின் முற்பாதியில் வேலையிடங்களில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதே கால கட்டத்தை ஒப்புநோக்க 40% கூடியுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 42 பேர் உயிரிழந்ததாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் அறிக்கை கூறுகிறது. 2015ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் வேலையிட விபத்துகளில் சிக்கி 30 பேர் மரணமடைந்தனர். மேலிருந்து கீழே விழுந்ததன் காரணமாகவே பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்தன. இந்த வகையில் 16 பேர் உயிரிழந்தனர்.

வாகனங்கள் அல்லது தொழிலக இயந்திரங்களுக்கு இடையே சிக்கி ஏழு ஊழியர்கள் மரண மடைந்தனர். வேலையிடங்களில் சரக்கு வாகனங்கள் போன்றவை மோதியதில் அறுவர் மாண்டனர். கட்டுமானத் துறையில்தான் ஆக அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த ஆண்டின் முற்பாதியில் நிகழ்ந்த வேலையிட மரணங்களில் 40 விழுக்காடு அத்துறையிலேயே நிகழ்ந்தன. இவ்வாண்டில் இதுவரை குறைந்தது 49 பேர் வேலையிடங் களில் உயிரிழந்துவிட்டனர். கடந்த மாதம் 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் குளோசில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் ஏழாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.

2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுபோன்ற பாதுகாப்பு வாகனங்கள் ஆண்டுதோறும் சுமார் 1,300 பணியிடங்களுக்குச் சென்று சுகாதார, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. கட்டுமானத் தளங்களில் வேலையிட மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படம்: வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம்