யாஸ்மின் பேகம்
கிட்டத்தட்ட 750 குடும்பங்களின் இல்லங்களில் இவ்வாண்டு முன்கூட்டியே தீபாவளி ஒளி பிரகாசமாக வீசத் தொடங்கியுள்ளது. 'லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்' எனும் திட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இத்திட்டத்தைத் தொடங்கியவர் திரு லோகப் பிரியன் ரெங்கநாதன் என்றாலும் இவர் தனி ஒருவராக இதனைச் செய்வதில்லை. பலரிடமிருந்து பொருட்களை நன்கொடையாகப் பெற்று அவற்றை அன்பளிப்புப் பைகளாகப் பிரித்து மேலும் பல தொண்டூழியர்களின் உதவியுடன் அவை வசதி குறைந்த இல்லங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன் அடையும் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அன்பளிப்பு பைகளைப் பெறுவார்கள். ஒரு பையில் அரிசி, மசாலா, எண்ணெய், சக்கரை என பல மளிகைப் பொருட்களும் இன் னொரு பையில் முறுக்கு, இனிப்பு போன்ற தீபாவளி பலகாரங்களும் அகல் விளக்குகளும் இருக்கும். சமூக ஊடகங்கள், வாய்வழி விளம்பரம் மூலம் இந்த திட்டத்திற்காக இவ்வாண்டு ஒன்றி ணைந்த 250க்கும் மேலான தொண்டூழியர்கள் பொருட்களை அன்பளிப்புப் பைகளில் வைக்கவும் அவற்றை வீடுகளுக்குக் கொண்டு செல்லவும் உதவினார்கள்.
இந்த ஆண்டு பணமாகவும் பொருளாகவும் $90,000க்கும் மேலான நன்கொடை இத்திட்டத்திற்காகப் பெறப்பட்டது. அதில் ரொக்கமாக $30,000-ஐ தொண்டூழியர்கள் வழங்கினர். இந்திய குடும்பங்களைத் தாண்டி இந்த ஆண்டு மற்ற இன வசதிக் குறைவான குடும்பங்களுக்கும், 'MINDS, Cerebral Palsy Association' என்னும் அமைப்பு களிலிருந்து சிரமப்படும் குடும் பங்களுக்கும் இத்திட்டம் உதவ ஆரம்பித்திருக்கிறது. இவர்களுக்கான அன்பளிப்பு பைகளில் குளியலறை தொடர்பான பொருட்களும் சேர்ந்து கொடுக்கப்படுகின்றன.
கிடைக்கப்பெற்ற தீபாவளிப் பொருட்களை தொண்டூழியர்கள் ஒன்றாக இணைந்து பைகளில் அடுக்கி வைக்கின்றனர். படம்: லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்

