'மோரா' புயலுக்கு பங்ளாதே‌ஷில் அறுவர் பலி; பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

'மோரா' புயலுக்கு பங்ளாதே‌ஷில் அறுவர் பலி; பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

2 mins read
67309234-b59a-4804-9d85-7541797fc22b
-

பங்ளாதே‌ஷின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கிய 'மோரா' புயலால் அறுவர் உயிர் இழந்தனர். காக்ஸ் பஸார், ரங்கமதி ஆகிய மாவட்டங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததுதான் அவர்களில் சிலரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையாக அல்லது பகுதி அளவு சேதமடைந்துள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கி இருக்கும் அகதி முகாம்களும் இந்த 'மோரா' புயலால் குறிப்பிடத் தக்க அளவு சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீன்பிடித் துறைமுகமான காக்ஸ் பஸாருக்கும் சிட்டகாங் நகருக்கும் இடையே உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 6 மணி அளவில் 'மோரா' புயல் கரையைக் கடந்ததாகவும் அப்போது மணிக்கு 117 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் பங்ளாதேஷ் வானிலை மையம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் காக்ஸ் பஸார், சிட்டகாங், இன்னும் பல மாவட்டங்களின் தாழ்வான பகுதி களை 1.2 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வெள்ள நீர் சூழலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக் கையாக பல நூறாயிரம் பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளி யேற்றப்பட்டு நிவாரண முகாம்கள், பள்ளிகள், அரசாங்க அலுவலகங் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகுகளும் இழுவைப் படகுகளும் அங்கு தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிட்டகாங், காக்ஸ் பஸார் விமான நிலையங் களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பங்ளாதே‌ஷின் கடலோர காக்ஸ் பஸார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் பலர் புயல் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி