சமுதாயம் ஒற்றுமையுடன் விளங்கவும் சிங்கப்பூரர்கள் ஓர் அணியாகத் திரளவும் சிங்கப்பூரர்கள் தங்கள் இனத்தைத் தாண்டி மற்ற இனத்தவருடன் பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதை நேற்று கூறிய உள்துறை சட்ட அமைச்சர் கா.சண்முகம் மேற்கூறியதை செயல்படுத்துவதில் சமூகத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று விளக்கினார். "மற்றவர்களுடன் தொடர்பு களை ஏற்படுத்திக்கொள்ள நாம் இனஎல்லைகளைத் தாண்டி மற்ற இனத்தவருடன் பழக வேண்டும். நாம் நல்ல முஸ்லிமாக, நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்துவராக அல்லது இறை நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம். அதே நேரத்தில் மற்றவருடன் கலந்துற வாடி நல்ல சிங்கப்பூரர்களாக விளங்கலாம்." சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய தலைமையகத்தில் உள்துறை குழுவின் பணித் திட்ட கருத்தரங்கில் அமைச்சர் மேற்கண்ட வாறு பேசினார். சிங்கப்பூரில் தலையாய பாதுகாப்பு மிரட்டலாக விளங்குவது பயங்கரவாதம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பயங்கரவாத சிந்தனைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முஸ்லிம் சமூகம் முயற்சி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரிலுள்ள இஸ்லாமிய சமய ஆசிரியர் குழுவினர் கூறியுள்ளனர். தீவிரவாதச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, உலகெங்கிலும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களைப் பாராட்டும் தனிமனிதர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு அவர்கள் சமூகத்திடம் வலியுறுத்தினர். இத்தகையோர் வழிதவறிப் போய்விட்டதால் இவர்களுக்கு முறையான ஆலோசனை அளிக்கப்படவேண்டும் என அவர்கள் கூறினர். முஸ்லிம் சமூகம் செயலில் இறங்கவேண்டும் என அழைப்பு விடுக்கும் அறிக்கையை ஏழு போதகர்கள் நேற்று வெளியிட்ட னர். அல்ஜுனிட் மதராஸாவின் முதல்வர் மஹ்முத் மட்லப் சித்திக், முஜாஹிரின் பள்ளிவாச லின் நிர்வாகத் தலைவர் அப்துல் மனாஃப் ரஹ்மாட், மேவங்கி ஷரியா ஆலோசகர் கமால் மொக்தார் ஆகியோர் அவர்களில் உள்ளடங்குவர். சிங்கப்பூரரான 22 வயது ஸாய்கா இஸ்ஸா சஹ்ரா அல் அன்சாரி, தீவிரவாதச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டதற்காக இம்மாதத் தொடக்கத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து சமய ஆசிரியர்கள் இந்த அழைப்பை விடுத்தனர்.
நேற்றைய பணித்திட்ட கருத்தரங்கில் பயிற்சிகளைப் பார்வையிடும் அமைச்சர் கா.சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

