சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடை பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரசார முழக்க வரியையும் பிரசார குழு உறுப்பினர்களையும் நேற்று முன்தினம் அறிவித்த நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப், அதிபர் தேர்தல் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இத் துடன் அதிபர் தேர்தலில் போட்டி யிட விருப்பம் தெரிவித்துள்ள கடைசி வேட்பாளராக இவர் ஆகிறார். தனது பிரசார குழுவினர் புடைசூழ 63 வயது திருவாட்டி ஹலிமா யாக்கோப் நேற்றுக் காலை 10.45 மணிக்கு தேர்தல் துறை யிடம் தகுதி, சமூக சான்றிதழுக் கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடைய குழுவில் முக்கிய தேர்தல் முகவரான கிரசண்டாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யான திரு லாரன்ஸ் லியாவுடன் அவருடைய முன்னாள் அடித்தள அமைப்புத் தலைவரும் மார்சிலிங் சமூக மன்றத் தலைவருமான திரு பாப் ஷா உடன் இருந்தார்.
அதிபர் தேர்தலுக்கான ஆணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட பின் அதிபர் தேர்தலுக்கான நடைமுறை அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது. அத்துடன் திருவாட்டி ஹலிமா தரப்பில் முழு மூச்சுடனான பணிகளும் தொடங்கின. அதிபர் தேர்தலுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நீண்டநாள் அரசி யல்வாதியும் தொழிற்சங்க வாதியுமான திருவாட்டி ஹலிமா, தன்னை தேர்தலுக்கு முன்மொழிய விருப்பவர் என, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத் தலைவரும் சீன சமூகத் தலைவருமான திரு டியோ சியோங் செங்கின் பெயரைக் குறிப்பிட்டார்.

