புதிய சாத்தியங்களை உருவாக்கு வதுடன் பல்வேறு வழிகளில் வெற்றியை அடைய உதவும் சிண்டாவின் உன்னத விருதுகள் மாணவர்களின் மேம்பாட்டுக்குக் கைகொடுக்கின்றன என்றார் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங். கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை கௌரவித்து வரும் சிண்டா, 26வது முறையாக நேற்று 485 மாணவர்களுக்கு உன்னத விருதுகளை வழங்கியது. முதல்முறையாக இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து இரண்டாம் அமைச்சருமான திரு இங், கற்றலின் மீது இளையர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த சிண்டா மேற்கொண்டு வரும் முயற்சிகள் கல்வி அமைச்சுடன் ஒத்திருக் கின்றன என்றும் தங்களுக்கு ஏற்ற பாதைகளில் பயணம் செய்த மாணவர்கள் குறிக்கோள்களை எட்ட கடினமாக உழைத்துள்ளனர் என்றும் பாராட்டினார்.
"கல்வித் துறை காலத்திற்கு ஏற்ப மாறுகிறது. புது தொழில் நுட்பங்களின் அறிமுகத்தால் மாறிவரும் பொருளியலைச் சமா ளிக்க கல்வி அமைச்சு மாணவர் களைத் தயார்ப்படுத்துகிறது," என்ற அமைச்சர் இங். அங் மோ கியோ மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் 22 கல்வி சார்ந்த, கல்வி சாரா பிரிவுகளில் மாண வர்களுக்கு உன்னத விருதுகள் வழங்கப்பட்டன. துணைப் பிரதமரும் சிண்டா இயக்குநர் குழுவின் தலைவரு மான திரு தர்மன் சண்முகரத்னம், சட்ட, நிதி மூத்த அமைச்சர் இந்திராணி ராஜா, முன்னாள் அமைச்சர் எஸ் தனபாலன் ஆகி யோருடன் ஏறக்குறைய 1,400 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்களுடன் (அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து) சமூகத் தலைவர்களில் ஒருவரான சத்பால் கட்டார், தமிழ் முரசு ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ். சந்திரதாஸ், முன்னாள் அமைச்சர் தனபாலன், துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், சிண்டாவின் தலைவர் குமாரி இந்திராணி ராஜா, சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பரதன், அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட். படம்: திமத்தி டேவிட்

