பினாங்கு நிலச்சரிவு: மூவர் பலி, 11 பேரைக் காணவில்லை

பினாங்கு நிலச்சரிவு: மூவர் பலி, 11 பேரைக் காணவில்லை

1 mins read
32ac416e-ae04-498f-aaae-e0cf496bb6bc
-

பினாங்கு, தஞ்சோங் புங்காவில் உள்ள கட்டுமானத்தளம் ஒன்றின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரது சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களில் இருவர் இந்தோனீசியர். ஒருவர் மியன்மார் நாட்டவர். 11 பேர் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர். இரு ஊழியர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். நேற்று காலை நேர்ந்த இந்த விபத்தில் மாண்டுபோன ஊழியர் கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். கட்டுமானப் பகுதியின் மேற்பார்வையாளரான மலேசியர் ஒருவரும் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

35 மீட்டர் ஆழத்துக்கு மண்ணைத் தோண்ட வேண்டி யிருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பினாங்கு தீ மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சாடொன் மொக்தார் கூறினார். நிலச்சரிவைப் பார்வையிடச் சென்ற மாநில முதல்வர், இந்தச் சம்பவம் குறித்து சாதாரண விசாரணை போதாது எனவும் முன்பு இரண்டாவது பினாங்கு பாலம், மெனரா அம்னோ ஆகிய இடங்களில் நிகழ்ந்த சம்பவங் களின் தொடர்பில் மேற்கொள்ளப் பட்டது போன்ற சிறப்பு அரசாங்க விசாரணை கோரப்போவதாகவும் சொன்னதாக 'மலாய் மெயில்' இணையத்தளம் குறிப்பிட்டது.

புதைந்தவர்களை மீட்கும் பணி துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷ், இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் சிலர் ரோஹிங்யாக்கள் என்றும் சொல்லப்படுகிறது. மீட்புப் பணி முடிவடையும்வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி