சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3 விழுக்காடு வளர்ச்சி அடையும் எனப் பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை கூறினார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வாழும் 200க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்காக அமெரிக்காவிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் பிரதமர் லீ தமது கணிப்பை முன்வைத்தார். சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளியல் 4.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தகத் தொழில் அமைச்சு இம்மாதம் வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புக் காட்டியது.
அதனைத் தொடர்ந்து, ஆண்டு முழுவதற்குமான நம்பிக்கை அளிக்கும் கணிப்பைப் பிரதமர் லீ வெளியிட்டார். உற்பத்தித் துறையின் வலு வான வளர்ச்சி பொருளியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனப் பிரதமர் லீ குறிப்பிட்டார். சேவைத் துறையும் ஓரளவு வளர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார். இந்த ஆண்டுக்கான பொரு ளியல் வளர்ச்சிக் கணிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்திய அரசாங்கம், பொருளியல் வளர்ச்சி 2 விழுக்காட்டுக்கும் 3 விழுக் காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என அறிவித்தது.
இந்தக் கணிப்பின் அடிப்படையில், ஆண்டு முழுவதற் குமான பொருளியல் வளர்ச்சி 3 விழுக்காட்டை எட்டும் என எதிர்பார்ப்பதாகப் பிரதமர் லீ கூறினார். அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பையும் முக்கிய அதிகாரிகளையும் சந்திக்க இருக்கிறார்.2017-10-24 06:00:00 +0800
வாஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் சிங்கப்பூரர்களுடன் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்: சீ குவாங் பெங்

