மத்திய கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்க போராடி வரும் உலகக் கூட்டணிக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆதரவு அடுத்த ஆண்டும் தொடரும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை யில் அந்த நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை திங்கட்கிழமை திரு லீ சந்தித் தார். அப்போது திரு லீ அமெரிக்க அதிபரி டம் இந்த உறுதியை வழங்கினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந் தித்தனர். அப்போது திரு லீ இந்த விவரங் களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரும் அமெரிக்காவும் வலுவான தற்காப்பு உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த திரு லீ, இந்த வட்டாரத்தில் அமெரிக்க ராணுவம் ஈடுபாடு கொண்டிருப் பதற்கு சிங்கப்பூர் ஆதரவு தருவதாகக் கூறினார். கடந்த 1990 முதல் அமெரிக்க விமானப் படை, கடற்படை விமானங்களுக் கும் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் இடம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரம் பேருக்கும் அதிகமான சிங்கப்பூர் ராணுவ வீரர்கள் பயிற்சி பெற அமெரிக்கா உதவி வருவதற்காக அவர் அந்த நாட் டிற்கு நன்றி கூறினார். அமெரிக்காவில் ஹார்வி சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது சிங்கப்பூர் குடியரசு விமானப்படையின் ஹெலிகாப்டர் களும் வீரர்களும் நிவாரணப் பணிகளில் உதவினர். இத்தகைய உதவியைச் செய்தது குறித்து சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைவதாக திரு லீ குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

