அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது மூவர் உயிரிழந் தனர்; கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந் தனர். சியாட்டலில் இருந்து போர்ட்லேண்டை நோக்கிச் சென்ற அந்த அம்ட்ராக் ரயில், சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 14 பெட்டிகளில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்குள்ளான ரயிலில் 80 பயணிகள் உட்பட மொத்தம் 86 பேர் இருந்ததாக அம்ட்ராக் நிறுவனம் தெரிவித்தது.
அவர்களில் சிலர் கண் ணாடிகளை உடைத்து, தப்பி வெளியே வந்ததாக கிறிஸ் கார்ன்ஸ் என்ற பயணி சொன்னார். "திடீரென, பாறை இடிந்ததுபோல பெரும் சத்தம் கேட்டது. மலையிலிருந்து கீழே விழுவதுபோல இருந்தது," என்றார் அவர். நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது தடம் புரண்டதால் பெட்டிகள் சில கீழே தொங்கியபடி இருந்ததைப் படங்கள் காட்டின. இதனால் பாலத்தின் கீழே நெடுஞ்சாலையில் சென்ற ஏழு வாகனங்களும் விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப் பட்டது.

