ஆசியான் நாடுகள் சரி, தவறு, நல்லது, கெட்டது என இனம் காணாமல் உலகின் எல்லா வல்லாதிக்க நாடுகளு டனும் இணைந்து வர்த்தகம் புரிய வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். நான்கு நாள் அதிகாரத்துவ பயணமாக சிட்னி சென்றுள்ள பிரதமர் லீ நேற்று சிங்கப்பூர்=ஆஸ்திரேலியத் தலைவர்களின் மூன்றாவது உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதையொட்டி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இணைந்து திரு லீ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆசியானை சீனா பிரித் தாள்கிறதா என்று ஆஸ்திரேலிய ஊட கங்கள் கேட்டதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
"ஆசியான் வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கும் அதன் ஆர்வமும் அதி கரித்து வரும் நிலையில், உலகளாவிய உத்திபூர்வ சமநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆசியான் நாடும் அதன் சொந்த நலன்கள் மீது அக்கறை கொண்டுள்ளதால் இந்த மாற்றத்தை அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க லாம். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை," என்று திரு லீ கூறினார். சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டு, சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடானது, வெகுதொலைவில் உள்ள இன்னொரு நாட்டைவிட வேறு கண்ணோட்டத்தில்தான் உலகைப் பார்க்கும் என்றும் அந்நாடு பல வேறுபட்ட பங்காளிகளுடன் வர்த்தகம் புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

