மலேசியத் தேர்தல்: எதிர்பாராத வெற்றியும் தோல்வியும்

மலேசியத் தேர்தல்: எதிர்பாராத வெற்றியும் தோல்வியும்

1 mins read
eec0da07-0930-48e8-98db-56b866395303
-

மலேசிய இந்திய வேட்பாளர்கள் எதிர்பாராத வெற்றியையும் தோல்வியையும் சந்தித்தனர். சிலாங்கூர் மாநிலம் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பி.பிரபாகரன் வெற்றி பெற்றார். எதிர்த்தர்ப்பு பிகேஆர் வேட்பாளர் தகுதி இழந்ததைத் தொடர்ந்து 22 வயது சட்ட மாணவரான பிரபாகரனுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. 14வது பொதுத் தேர்த லின் ஆக இளைய வயது வேட்பாளர் இவர் தான். மேலும் மலேசிய தேர்தல் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரதமர் நஜிப் 23வது வயதில் போட்டியிட்டதே ஆகக் குறைந்த வயதாக இருந்துவந்தது.

அதனை இவர் முறியடித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் சட்டத் தேர்வை எழுத இருக்கும் பிரபாகரன், தமது வெற்றிக்குத் தொகுதி மக்களும் பக்கத்தான் ஹரப்பானுமே காரணம் என்று கூறினார். மலேசிய இந்தியர் மத்தியில் புதிய வரவான பிரபாகரன் வெற்றி பெற்றிருக்கும் அதே நேரம் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தோல்வியைத் தழுவினார்.

ஜோகூரின் செகாமட் தொகுதியில் 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி கண்டு வந்த சுப்ரமணியத்தின் முதல் தோல்வி இது. கடந்த முறை 1,217 என்னும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பிகேஆர் வேட்பாளரை தோற்கடித்த இவர், இப்போது அதே கட்சி சார்பில் முதன்முறையாக களமிறங்கிய தொழிலதிபர் ஆர்.சந்திரகுமாரிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார்.

இளம் வயதில் சுயேச்சையாகக் களம் கண்டு வாகை சூடிய பி.பிரபாகரனை பத்து நாடாளுமன்ற தொகுதி மக்கள் தூக்கிவைத்துக் கொண்டாடினர். படம்: ஊடகம்