சிங்கப்பூரின் மேல்தட்டு வர்க்கத்தினர் அனைத்துப் பிரிவினரும் முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சமூகக் கட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லாவிடில் சமூக முன்னேற்றம் பாதிப்படையும் என்று அவர் வலியுறுத்தினார். திறமை இருந்தபோதும் வசதி குறைந்த பின்னணியிலிருந்து வருபவர்களைச் சமூகக் கட்டமைப்புக்குள் வரவேற்க மேல் தட்டு வர்க்கத்தினர் தவறினால் அவர்கள் தங்கள் கடமை களிலிருந்து தவறிவிட்டதாகி விடும் என்று பிரதமர் கூறினார். "அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமூக முன்னேற்றம் பாதிக்கப்படும்.
அதுமட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்கத்தினர் தங்கள் நலனில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கிவிடுவர். சமுதாயத்தில் உள்ள மற்ற பிரிவினரை வழிநடத்த வும் பார்த்துக்கொள்ளவும் அவர் களுக்கு இருக்கும் பொறுப்பை அவர்கள் சரியாகச் செய்ய மாட்டார்கள்," என்றார் திரு லீ. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய அதிபர் உரை பற்றிய விவாதத்தில் சமூக முன்னேற்றம் முக்கிய இடம்பிடித்துள்ளது. சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு நிலை அதிகரிக்கும் ஆபத்து இருந்து வரும் நிலையில் மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் அமைச்சர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.

