சுவா சூ காங்கில் சாலையைக் கடக்கும்போது பேருந்து மோதி, அதனடியில் சிக்கிக்கொண்ட ஆறு வயதுச் சிறுவன் பின்னர் மருத்துவ மனையில் உயிரிழந்தான். சுவா சூ காங் அவென்யூ 5ல் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து குறித்து காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட அச்சிறுவனைக் கருவிகளின் துணை கொண்டு மீட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் அடியில் அச்சிறுவன் காணப்பட்டதாக அறியப்படு கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி வித்தது. பலத்த காயமடைந்து சுயநினைவின்றி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறியப்படுகிறது. கார்நிறுத்தப் பூங்காவைவிட்டு காரில் வெளியே வந்தபோது புளோக் 486க்கு முன் னால் நிகழ்ந்த அவ்விபத்தைக் கண்டதாக குடிநுழைவு ஆலோசகராகப் பணிபுரியும் திரு சார்லி லிம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னார்.
பேருந்தின் பின்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சிறுவனைக் கருவிகளின் துணைகொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர். படம்: ஸ்டோம்ப்

