தாய்லாந்தில் குகை ஒன்றில் சிக்கி இருக்கும் 13 பேரை மீட்கும் முயற்சிகளுக்கு மழை பெரும் மிரட்டலாக ஆகிவருகிறது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. தாம் லுவாங் என்ற அந்தக் குகை அமைந்துள்ள சியாங் ராய் உள்ளிட்ட நாட்டின் வடக்குப் பகுதியில் ஜூலை 7 முதல் 12 வரை கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்து இருக்கிறது. மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் சிக்கலான வேறு முயற்சிகளைத் தாங்கள் மேற்கொள்ளவேண்டி வரும் என்று நேற்று மீட்புப் பணி யாளர்கள் தெரிவித்தார்கள்.
குகைக்குள் சென்ற மாதம் 23ஆம் தேதியிலிருந்து, சிக்கி இருக்கும் 11 முதல் 16 வரை வயதுள்ள 12 சிறுவர்களையும் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரையும் மீட்க உச்சக்கட்ட வேகத்தில் பணிகள் நடப்பதாக சியாங் ராய் ஆளுநர் நரோங்சாக் அறிவித்தார். குகைக்குள் சிக்கியிருக்கும் சிறார்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. முக்குளிப்பு அனு பவமும் இல்லை என்று தெரிகிறது. 24 மணி நேரமும் குகையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவரையில் 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரிகள் கூறினர். குகைக்குள் பல நாட்களாக சிக்கியிருப்பதால் அந்தப் பையன் களுக்கு உடல்நலமும் மனநலமும் எப்படி இருக்குமோ என்ற கவலை யும் அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் சியாங் ராய் மாநிலத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள் பல நாட்களாக சிக்கி இருக்கும் 13 பேரையும் மீட்க பெரும் முயற்சிகள் தொடர்கின்றன. 24 மணி நேரமும் குகையிலிருந்து தண்ணீர் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை வரக்கூடும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் அச்சம் அதிகரித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

