சுடச் சுடச் செய்திகள்

தமிழ் முரசு செய்தியாளருக்கு ‘செய்தித்துறை உன்னத விருது’

தமிழ் முரசின் ‘சிங்கப்பூர் காதல் கதை’ என்ற செய்தி 2018ஆம் ஆண்டின் செய்தித்துறை உன்னத விருதினை வென்றுள்ளது.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகங்களில் கடந்த ஆண்டில் வெளிவந்த செய்திகளில் செய்தித்துறை உன்னத விருதை தமிழ் முரசு செய்தியாளர் முகம்மது ஃபைரோஸ் எழுதிய இச்செய்தி வென்றது. தமிழ் முரசில் வெளி வந்த இச்செய்தி, தப்லா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய ஆங் கில இதழ்களிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளியானது.

பிரதமர் லீ சியன் லூங் இச்செய்தியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு நாளிதழ்களின் சமூக ஊடகங்களில் மிக அதிகமானோரால் தொடரப்பட்ட செய்தியாக இச்செய்தி உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 7,000 பேர் இந்தச் செய்திக்கு ‘லைக்ஸ்’ கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 900 பேர் இக்கதையைப் பகிர்ந்துள்ளனர்.

எட்டுக் குழந்தைகளைக் கொண்ட இளம் விதவை திருவாட்டி மீனாவைக்  காதல் திருமணம் செய்துகொண்டார் அவரது சீன மேலதிகாரியான திரு கோ லெங் கியட். பின்பு இவர்கள் இருவருக்கு மேலும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். அனைத்துப் பிள்ளைகளையும் தம் பிள்ளைகள்போல் பாவித்த திரு கோ, திருவாட்டி மீனா தமது 52ஆவது வயதில் இறந்தபிறகும் பிள்ளைகளை அன்பாகக் கவனித்து வந்தார்.

கடந்த ஆண்டு தமது 83ஆவது வயதில் இறந்த பிறகு அவரது விருப்பத்தின் பேரில் சீன முறைப்படி திரு கோவின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அவருக்கு 23 பேரப்பிள்ளைகளும் 17 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உண்டு. அனைத்துச் சிங்கப்பூரர் களின் இதயங்களையும் கவர்ந்த, இன, மத வேற்றுமைகளைக் கடந்த சிங்கப்பூர் காதல் கதை இது எனப் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“இந்த விருது ஒட்டுமொத்த தமிழ் முரசுக்கும் கிடைத்த வெற்றி.  தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிசினஸ் டைம்ஸ் உட்படப் பிரபல ஆங்கில நாளிதழ்களுடன் போட்டியிட்டு இறுதிச் சுற்றுக்கு நியமனம்  பெறுவதே சாதனையாகும். இதில் வெற்றியும் பெற்றதில் பெருமை அடைகிறேன்,” என்றார் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் முரசில் பணியாற்றி வரும் ஃபைரோஸ், 29.
திரு ஃபைரோஸின் கதை கடந்த ஆண்டின் தலைசிறந்த கதை பிரிவிலும் நியமனம் செய்யப்பட்டது. ஆனால் அதே பிரிவில் நியமனம் செய்யப்பட்ட அனுபவமிக்க தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் திருவாட்டி சல்மா காலிக் அந்த விருதை வென்றார். சுகாதாரத்துறையில் மூத்த செய்தியாளரான அவர் பல விருதுகளை வென்று உள்ளார். தாம் இந்த விருதினை ஃபைரோஸின் கதையே வெல்லும் என நினைத்ததாக அவர் கூறினார்.

“ஃபைரோஸின் கதை மிகவும் உருக்கமான ஒரு காதல் கதை. நான் அவரது கதையை வார்த்தை விடாமல் படித்தேன். அவரை எதிர்த்துப் போட்டியிட்டதில் நான் பெருமை அடைகிறேன்,” என்றார் சல்மா.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon