900,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு 132 மில்லியன் வெள்ளி தள்ளுபடிகள்

900,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு 132 மில்லியன் வெள்ளி தள்ளுபடிகள்

2 mins read
919c7a76-bb19-4dc3-96d1-451730e26394
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 930,000 சிங்கப்பூரர்கள், இவ்வாண்டு ஏப்ரல் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை சேவைப் பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவர்.

இவ்வாண்டின் வரவு செலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டிருந்த தள்ளுபடிகளின் மதிப்பு இவ்வாண்டுக்கு 132 மில்லியன் வெள்ளி என்று நிதியமைச்சு தெரிவித்தது. இந்தத் தள்ளுபடிகளை அரசாங்கம் 2013ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் கட்டவேண்டிய சேவைப் பராமரிப்புக் கட்டணத்தைக் குறைக்க இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் வசிக்கும் வீடுகளுக்கு ஒன்றரை மாதத்திற்கும் மூன்றரை மாதங்களுக்கும் இடைப்பட்ட தள்ளுபடி கிடைக்கும். இந்தத் தள்ளுபடிகளைப் பற்றி விவரிக்கும் கடிதம் ஒன்று தகுதிபெறும் வீடுகளுக்கு மார்ச் இறுதி முதல் அனுப்பப்படும்.

ஒன்று மற்றும் இரண்டு அறை வீடுகளில் குடியிருப்போர் இவ்வாண்டின் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஒரு மாதத் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். 2020ஆம் ஆண்டு ஜனவரியில் அரை மாதத் தள்ளுபடியை அவர்கள் எதிர்பார்க்கலாம். மூன்று மற்றும் நான்கு அறை வீடுகளில் தங்கியிருப்போர் ஏப்ரலில் ஒரு மாதத் தள்ளுபடியைப் பெறுவர். இவ்வாண்டு ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரிக்கும் அவர்கள் அரை மாதத் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.

ஐந்து அறை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் நான்கு மாதங்களுக்கு அரை மாதத் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். எக்சிகியூட்டிவ் மற்றும் பல தலைமுறை அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் அரை மாதத் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இது குறித்து மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் 5 மணி வரை 1800-866-3078 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது sccrebates@mailbox.hdb.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.