கடல் எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தைகள் ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். கடலில் பதற்றநிலையைத் தணிக்க சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளுமே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுடன் திரு லீ மேற்கொண்ட ஓய்வுத்தல சந்திப்புக்குப் பிறகு இரண்டு தலைவர்களும் மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தின் முன்னிலையில் உரையாற்றினார்கள்.
ஒத்துழைப்பும் முன்னோக்கிச் செல்லும் கண்ணோட்டமும் உள்ளடங்கிய இருநாட்டு உறவை நிலைநாட்டுவதில் தாமும் டாக்டர் மகாதீரும் கடப்பாடு கொண்டுள்ளதாகப் பிரதமர் லீ தெரிவித்தார்.
வரும் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ள மகாதீரையும் அவரது மனைவி சித்தி ஹஸ்மா முகம்மது அலியையும் திரு லீ அழைத்திருக்கிறார். அந்த அழைப்பை ஏற்பதில் தமக்கு மகிழ்ச்சி என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

