பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகளை வலுப் படுத்தும் நோக்கில் அதிக மக்கள் நட மாட்டம் உள்ள இடங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்கக்கூடிய போலிஸ் குழுக்கள் பணியில் அமர்த்தப்படும். விழாக்காலத்தில் பாதுகாப்பை வலுப் படுத்த ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே போன்ற பிரபலமான இடங்களில் ஏற்படும் சம்பவங்களைக் கையாளும் குழுவின் (ஐஆர்டி) சுற்றுக்காவல் பணிகள் அதிக ரிக்கப்படும். 2017ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தக் குழு முதன்முதலாகப் பணியில் அமர்த்தப்பட்டது. சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற போலிஸ் படையின் வருடாந்திர பணித் திட்ட கருத்தரங்கில் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்த சட்ட, உள் துறை அமைச்சர் கா.சண்முகம், பயங்கர வாதத்தை ஒடுக்கும் ஆற்றலுக்கான தேவையை வலியுறுத்தினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் எப்போது, எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ப தற்கு உதாரணமாக கடந்த மாதம் நடந்த கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டை திரு சண்முகம் சுட்டினார். "நியூசிலாந்தில் நடந்த இத்தாக்குதல் எங்கும் எப்போதும் நடக்கலாம். தாக்குதல் நிகழும் என்று எதிர்பார்த்திராத நாடுக ளில் நியூசிலாந்தும் ஒன்று," என்றார் அவர். இந்தத் தாக்குதலை நியூசிலாந்து மக்கள் கையாண்ட விதத்தையும் அந்த நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்னின் தலைமைத்துவத்தையும் பாராட்டிய திரு சண்முகம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு அந்நாடு தந்த பதிலடி சிங்கப்பூருக்கு படிப்பினையாக அமைந்துள்ளது என்றார். சிங்கப்பூரின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களும் மேம்படுத்தப்படுவதால், தாக்குதல் நிகழ்ந்த உடனேயே பதில் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் குறையும்.
புதிதாக அறிமுகம் கண்டுள்ள ஆளில்லா வானூர்தியைப் பற்றி அதிகாரியிடம் கேட்டறியும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். படம்: சாவ்பாவ்

