"இந்தியா தகவல் அளித்தது, ஆனால்..."

"இந்தியா தகவல் அளித்தது, ஆனால்..."

1 mins read
5e73f863-775a-4264-8823-84225e3c39be
-

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிப்புச் சம்பவங்களைப் பற்றி இந்தியா முன்கூட்டியே இலங்கைக்குத் தகவல் அளித்திருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். தேவாலயங்களிலும் சொகுசு ஹோட்டல்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். காயமடைந்து தவிக்கும் 500 பேரில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

"இந்தியா எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தது. ஆனால் அதனைக் கொண்டு நாங்கள் செயல்பட்ட முறையில் தவறு நடந்துள்ளது. உயர் அதிகாரிகளிடம் இந்தத் தகவல் சேரவில்லை," என்று திரு விக்ரமசிங்க, தலைநகர் கொழும்பில் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

சம்பவத்தை ஆராய்ந்து வரும் இலங்கை அதிகாரிகள், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகத் திரு விக்ரமசிங்க கூறினார். தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்பதாக ஐஎஸ் அனைத்துலக பயங்கரவாத அமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தாக்குதலுக்கு 'தேசிய தௌஹீத் ஜமாத்' என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு என்று இலங்கை அரசாங்கம் கைக்காட்டியிருந்தது.

'தௌஹீத் ஜமாத்' என்ற பெயரைக் கொண்ட பல்வேறு அமைப்புகளையும் இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கான ரத்த தான இயக்கத்தை அமைத்திருப்பதாக 'ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்' தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டு 'தௌஹீத் ஜமாத்' அமைப்பினர், தங்களுக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என்று நேற்று முன்தினம் தெரிவித்தனர்.