நஜிப் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் - நீதிபதி

நஜிப் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் - நீதிபதி

2 mins read
ec6fda9c-5dc3-4492-9916-18bf85cafd09
-

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட விதத்தின் காரணமாக அவற்றை ரத்து செய்ய திரு நஜிப் செய்திருந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

திரு நஜிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்ட விதம் தவறு என்று அவரது வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை என்றும் அத்தகைய முறையில் எழுதப்பட்ட குற்றச்சாட்டுகள் திரு நஜிப்பை திசைத்திருப்பலாம் அல்லது தன்னைத் தற்காக்க முடியாத அளவுக்கு அவரைப் பலவீனப்படுத்தலாம் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.

மேலும் திரு நஜிப்புக்கு எதிரான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகவும் அவற்றை நீதிமன்றம் ஒரே நேரத்தில் விசாரிக்க முடியாது என்றும் தற்காப்பு வழக்கறிஞர் கமருல் ஹிஷாம் கமருடின் தெரிவித்தார். திரு நஜிப்பின் நீதிமன்ற விசாரணையுடன் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பற்றி பேசிய திரு ஹிஷாம், இந்தப் பணத்தை ஒருவர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வழிகளில் பெற முடியாது என்றார்.

ஆயினும், இதனை மறுத்த நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி, அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து திரு நஜிப் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு அவை ஒழுங்காக எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திரு நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவற்றின் துணைப் பத்திரங்களுடன் படிக்கப்படவேண்டும் என்பதால் அவை தெளிவில்லாமல் இல்லை என்று அரசுதரப்பு வழக்கறிஞர் வி. சிதம்பரம் தெரிவித்தார். வெவ்வேறு குற்றங்களுக்கு நாடாளுமன்றம் வெவ்வேறு சட்டங்களை உருவாக்கியிருப்பதால், வெவ்வேறு சட்டங்களின்கீழ் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவது நியாயமே என்று அவர் கூறினார்