இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி நகரை 'ஃபானி புயல்' காலை 9.30 மணிக்கு அடைந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூரி நகரில் காற்று மணிக்கு 142 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தும் குடிசைகள் இடிந்தும் இருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
புயலில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
புவனேஸ்வர் நகரில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைப் பொட்டலமிட்டு வருகின்றனர். இந்தியாவின் தேசிய பேரிடர் நிர்வாகப் படை ஒடிசாவில் 28 குழுக்களையும் ஆந்திரப் பிரதேசத்தில் 12 குழுக்களையும் மேற்கு வங்காளத்தில் ஆறு குழுக்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் 89 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வர் நகரிலிருந்து புறப்படவிருந்த விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை கோல்கத்தா விமான நிலையம் மூடப்படும்.

