அடையாளம் வெளிவராமல் இருக்க ஆடைகளை மாற்றிக்கொண்ட மாணவன்

தேசியப் பல்கலைக்கழகத்தின் குளியல் அறையில் மாணவி ஒருவரை மறைவிலிருந்து காணொளி எடுத்த  மாணவன், தனது அடையாளம் வெளிவராமல் இருக்க உடனே தனது உடைகளை மாற்றிக்கொண்டதாக போலிசார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற செயல்களை அந்த ஆடவர் ஏற்கனவே செய்திருப்பதாக போலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன. 

26 வயது ஜொவெல் ராசிஸ் இஸ்மைல் திங்கட்கிழமை (மே 13) நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டும் மானபங்கம் செய்த மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டன.

மாணவர் தங்குமிட விடுதியான ‘ராஃபிள்ஸ் ஹால்’லில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தேசியப் பல்கலைக்கழகப் பேச்சாளர் தெரிவித்தார். காணொளி எடுத்த மாணவரும் பாதிக்கப்பட்ட 23 வயது பெண் மாணவியும் இதே விடுதியில் தங்கி வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை காலை 8 மணி வாக்கில் தெரிய வந்ததாக போலிசார் தெரிவித்தனர். தங்குமிட விடுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியாகச் சந்தேக நபரை அடையாளம் கண்டு போலிசார் அவரை அதே நாளில் கைது செய்தனர். அந்த மாணவரிடம் இருந்த மடிக்கணினி, கைத்தொலைபேசி உள்ளிட்ட சில கருவிகள் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவு வழங்குவதாகவும் விசாரணைக்காக போலிசாருடன் ஒத்துழைத்து வருவதாகவும் தேசியப் பல்கலைக்கழகம் தெரிவித்தது. ஏப்ரல் முதல் தேசியப் பல்கலைக்கழகம் தனது கட்டட வளாகங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்ட மாணவன் மீதான அத்துமீறிய நுழைவு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை, 1,500 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.