வியட்னாமில் விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள்

வியட்னாமில் வெளிநாட்டுச் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருபது மாணவர்கள் பேருந்து விபத்தில் காயமடைந்ததாகத் தகவல் வெளிவந்தது. ‘புரோஜெக்ட் பொனிக்சா’ என்ற திட்டத்தின்கீழ் நான்காவது முறையாக நடத்தப்படும் சமூக சேவைப் பயணத்தை மேற்கொண்டுள்ள முப்பது மாணவர்களில் இவர்களும் அடங்குவர். 

ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியிலிருந்து வியட்னாமின் மத்திய பகுதியிலுள்ள ஹுவேயில் இருந்த அவர்கள், திட்டத்தை கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றினர். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் அவர்கள் சுற்றுலா ஒன்றுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நேர்ந்ததாக அந்தப் பல்கலைக்கழகம் கடந்த வாரம் தெரிவித்தது. அந்த மாணவர்கள் சென்ற இரண்டு பேருந்துகளில் ஒன்று வழியில் சாலையோரக் கல் மீது மோதியது. அப்போது அந்தப் பேருந்தில் இருந்த  அனைவரும் பேருந்து இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்.

பெரும்பாலானோர் சிறிய சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினர். ஒருசிலருக்கு கால் முறிவு, கழுத்தில் காயம், மணிக்கட்டு எலும்பு முறிவு ஆகியவை ஏற்பட்டன. மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருவதாக அறிவித்த பல்கலைக்கழகம், நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றது.