கத்தியால் ஒருவர் மரணம்; இலங்கையில் தேசிய ஊரடங்கு

இலங்கையில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் கடைகள் ஆகியவற்றை மக்கள் முற்றுகையிடும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசாங்கம் நாடு முழுவதிலும் ஊரடங்கை அறிவித்திருந்தது. நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை நான்கு மணி வரை  ஊரடங்கு நீடித்தது. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் உயிரிழந்திருப்பதாக இலங்கையின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் 250 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீதான வெறுப்பு இலங்கையில் அதிகரித்து, அச்சமூகத்தினர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

கத்தியால் குத்தப்பட்ட 42 வயது ஆடவர் மருத்துவமனையில் மாண்டதாக போலிசார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகக் கும்பல்கள் கலவரத்தில் ஈடுபட்டு பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளையும் சேதப்படுத்தி வருவதாக இலங்கையின் வடமேற்கு மாநிலத்தின் முஸ்லிம்-பெரும்பான்மை பகுதிவாழ் மக்கள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் போலிசாரும் ராணுவத்தினரும் கண்டும் காணாமலும் இருப்பதாக அங்கு வசிக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.