இதய நோய்க்கான அபாயம் இந்தியப் பெண்களுக்கு அதிகம்

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இதய நோய், நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளிட்ட  பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என்று தேசிய சுகாதாரக் குழுமம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது நீரிழிவு நோய்க்கான அறிகுறி என்று குழுமம் தெரிவித்திருக்கிறது. 

2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தேசிய சுகாதாரக் குழுமத்தில் மருத்துவ சிகிச்சை நாடிய 252,000 நோயாளிகளின் விவரங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் அடிப்படையாகக் கொண்டன.

மலாய் மற்றும் இந்தியப் பெண்கள், அதே இனத்தைச் சேர்ந்த ஆண்களைக் காட்டிலும் நாள்பட்ட சிறுநீரக நோய், இதய நோய் ஆகியவற்றால் பாதிகப்படும் அபாயம் அதிகம். நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மற்ற இனத்துப் பெண்களைக் காட்டிலும் சீனப் பெண்களுக்கு அதிகம்.

சீன, மலாய், இந்திய இனங்களைச் சேர்ந்த ஆண்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம் அந்த மூன்று இனங்களைச் சேர்ந்த பெண்களைவிட அதிகம். இனவாரியாகப் பார்த்தால், இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் மலாய்க்கார்களுக்கு ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகம்.

சிங்கப்பூரிலுள்ள மூன்று சுகாதாரக் குழுமத்தில் தேசிய சுகாதாரக் குழுமமும் ஒன்று. சிங்கப்பூர் சுகாதார சேவைகள், தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு ஆகியவை அந்த மற்ற இரண்டு குழுமங்கள். மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றை அவை நிர்வாகிக்கின்றன.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்தக்கொழுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மூளையின் ரத்தக் குழாய் நோய்கள் ஏற்படும் அபாயம் மற்றவர்களைவிட 6.3 விழுக்காடு அதிகம். உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவும் கொண்டுள்ள நோயாளிகளுக்கு இதே நோய்கள் ஏற்படும் அபாயம் மற்றவர்களைவிட 4.6 விழுக்காடு அதிகம்.