விசாக தினத்தில் ஆபத்தை விளைவிக்க சதி - ரணில்

இலங்கையில் விசாக தினத்தின்போது பொதுமக்களின் அமைதியைக் குலைக்க ஒரு கும்பல் முயன்று வருவதாகவும் அவர்கள் தடுக்கப்படவேண்டும் என்றும் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

குளியப்பிட்டிய மாநிலத்திலுள்ள பள்ளிவாசல்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்கள் ஆகியவற்றில் கலவரத்தால் ஏற்பட்ட சேதங்களைத் திரு விக்ரமசிங்க நேற்று நேரில் பார்வையிட்டபோது அவ்வாறு கூறினார். அவருடன் பெளத்தத் தலைவர்களும் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகை தினத்தில் ஏற்பட்டது போல் விசாக தினத்தின்போது அசம்பாவிதங்கள் நேராதவண்ணம் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் திரு விக்ரமசிங்க கூறினார். தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைச் செய்வது குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் அவர் சொன்னார்.