நேரலை சேவைக்கு ஃபேஸ்புக் கட்டுப்பாடு

ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனம், தனது நேரலைச் சேவைக்குக் கட்டுப்பாடு விதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கிறைஸ்ட்சர்ச் நகர பள்ளிவாசலில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டிற்கு அடுத்து இணைய வன்முறையைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் இணையும் சந்திப்பை முன்னிட்டு அந்நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது. 

கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிக்காரன் ஒருவன் தனி ஆளாக 51 பேரைச் சுட்டுக்கொன்றான். தான் இவ்வாறு செய்ததை அவன் ஃபேஸ்புக் நேரலையில் படமெடுத்தான். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

விதிமுறைகளை மீறும் பயனீட்டாளர்களுக்கு எதிராக நேரலைச் சேவையைப் பயன்படுத்தத் தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்ற கொள்கையை அறிமுகம் செய்யப்போவதாக ஃபேஸ்புக் தனது அறிக்கையில் கூறியது.இணைய வன்முறைக்கு எதிரான தாம் வழிநடத்தும் ‘கிறைஸ்ட்சர்ச் கால்’ இயக்கத்தை  இந்த மாற்றம் ஆதரிப்பதாக நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்திருக்கிறார். இணைய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த இந்த முடிவு முதல் படி என்றார் அவர்.