எதிராளிகளைத் திணறடித்த வெற்றி

இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வெற்றி வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய நாடாளுமன்றத்தின் 542 இடங்களில் பாரதிய ஜனதா 298 இடங்களைப் பெற்றிருப்பதை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 272 இடங்களைவிட அதிகமாகவே பாரதிய ஜனதா பெற்றுள்ளது. 

புதுடெல்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளைத் தொலைக்காட்சி ஒளிவழிகளில் பார்த் கட்சித் தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அவர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

“ஆக்கபூர்வமான அரசியலுக்கும் நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கும் இது மிகப்பெரிய ஆதரவு. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இதற்கு எங்கள் சிரந்தாழ்ந்த நன்றி,” என்று பாரதிய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.