மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்த அபார வெற்றி தங்களின் தலைமைத்துவம் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது,” என்று திரு லீ தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். தளவாடச் சவால்கள் பெரிதாக இருந்தபோதும் பொதுத்தேர்தல் சீராகவும் அமைதியாகவும் நடந்தது வியப்புக்குரியது என்றும் திரு லீ கூறியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

சிங்கப்பூர்-இந்திய உறவை மேம்படுத்துவதில் திரு மோடி கொண்டுள்ள தனிப்பட்ட ஆர்வத்தை சிங்கப்பூர் பாராட்டுவதாகத் திரு லீ கூறினார். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகமாவதற்குத் திரு மோடியின் உறுதியான ஆதரவு காரணம் என்றும் அவர் சொன்னார்.

2015ஆம் ஆண்டில் உத்திபூர்வ பங்காளித்துவம் ஒன்றின்மூலம் தற்காப்பு, கலாசாரம், மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் இருநாட்டு உறவுகள் மேம்பட்டதாகத் திரு லீ கூறினார்.

“ஏற்கெனவே எங்கள் உறவுகள் பலமாக உள்ளன. ஆயினும், இரு நாடுகளும் கூட்டிணைந்து செயல்படக்கூடிய துறைகளை நன்கு பயன்டுத்தி, இரு நாட்டு மக்களிடையே நிலவும் நற்பெயரைப் பயன்படுத்தி, நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான செயலாற்றலை முழுமையாக்க  நாங்கள் இன்னும் நிறைய செய்யலாம்,”என்றார் சிங்கப்பூர் பிரதமர்.