அமைச்சர் சண்முகம் : மலேசிய மரண தண்டனை கைதிகளுக்கு விலக்கு அளிக்க முடியாது

மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இதுவரை மூன்று மலேசியர்களுக்கான  மரண தண்டனையை ரத்து செய்ய சிங்கப்பூரிடம் கேட்டிருந்ததாகவும் அவர்களில் இருவர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார். ஆயினும், மரண தண்டனையிலிருந்து மலேசியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது, இல்லையெனில் சிங்கப்பூரில் நிலவும் சட்டத்தின் மாட்சிமை என்ற நிலை கீழறுக்கப்படலாம் என்று திரு சண்முகம் கூறினார். “இது குறித்து எத்தனை முறை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டாலும் எங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன்,” என அவர் சொன்னார்.

நீதிமன்றங்கள் ஏற்கெனவே தண்டனைக விதித்த பிறகு சட்ட ரீதியான காரணங்களின்றி சிங்கப்பூர் அரசாங்கம் தலையிடாது என்று அவர் கூறினார். மரண தண்டனை சிங்கப்பூரர்களுக்கே விதிக்கப்படும்போது மலேசியர்களுக்கு மட்டும் அந்தத் தண்டனையிலிருந்து விதிவிலக்கு தருவது நியாயமற்றது என்று திரு சண்முகம் சொன்னார். 

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான பன்னீர்செல்வம் பரந்தாமனின் வழக்கைப் பற்றி மலேசியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பு வகிக்கும் லியூ வூய் கியோங், சட்ட துணையமைச்சர் எட்வின் டோங்கிடம் கேட்டதாகத் திரு சண்முகம் தெரிவித்தார். 31 வயது பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையைத் தள்ளிவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 23ஆம் தேதி) முடிவு செய்தது. பன்னீர்செல்வத்திற்கு இன்று மரண தண்டனை விதிக்கப்படவேண்டியிருந்தது. இந்த வழக்கு முடிந்த பிறகு திரு லியூவிடம் உரிய பதில் கொடுக்கப்படும் என்றார் திரு சண்முகம். 

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வேலைத்திட்ட கருத்தரங்கில் பேசிய திரு சண்முகம், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பதைச் சுட்டினார். “அதனை நாம் மதித்தாகவேண்டும். ஆயினும் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதனை மலேசியா மதிக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார் திரு சண்முகம். 

சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்நாட்டு மக்கள் ஆதரிப்பதாகக் கூறிய திரு சண்முகம், போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பதில் மரண தண்டனை உதவுகிறது என்றார்.