சட்டவிரோத வேலைத் தரகு அதிகரித்து வருகிறது

பங்ளாதேஷி கட்டுமான ஊழியரான 35 வயது ராஜு இதுவரை ஆறு முறை சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்திருக்கிறார். ஆனால், அவரது வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு முறையும், வேலையைப் பெறுவதற்காக ஒரு தரகருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கிறார். ஆனால், வேலை செய்து பணம் சேமிப்பதற்குள்ளாக அவர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார். “எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, என் வாழ்க்கை இன்னமும் பூஜியமாகவே இருக்கிறது,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

இங்குள்ள சட்டவிரோத வேலைத் தரகர்களின் மூலமாக வேலையில் சேரும் திரு ராஜு போன்ற தொழிலாளர்கள், வழக்கத்தைவிட அதிகமாகத் தரகுப் பணம் கட்டுகிறார்கள். சட்டப்படி இரண்டு மாதச் சம்பளத்திற்குமேல் தரகுப் பணம் வசூலிக்கக்கூடாது.இந்தச் சட்டவிரோத வேலைத் தரகுத் தொழில் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாக TWC2 எனும் வெளிநாட்டு ஊழியர் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது வேலைத் தரகர் எங்கிருக்கிறார் என்பது தெரியுமெனக் கூறின 335 தொழிலாளர்களில் பாதி பேர், அந்தத் தரகர் சிங்கப்பூரில் இருப்பதாகச் சொன்னார்கள். பல சமயங்களில், இந்தத் தரகரும் வெளிநாட்டு ஊழியராக இருப்பார். இங்குள்ள முதலாளிகளுடனான தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்தச் சட்டவிரோத வேலைத் தரகர்கள் ஆண்டுக்கு $232 மில்லியன் வரை சம்பாதிப்பதாக அமைப்பின் அறிக்கை கணிக்கிறது.  இந்தச் சட்டவிரோத நடவடிக்கையால் அரசாங்கம் வரிப்பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாது, கடன்படும் தொழிலாளர்களும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என அறிக்கை குறிப்பிட்டது.

திரு ராஜு தனது நண்பர் திரு ஹுசேன் மியாவுக்காகவும் இங்குள்ள ஒரு தரகரிடம் மொத்தம் $6,500 ரொக்கப் பணம் கொடுத்திருக்கிறார். அந்தத் தரகர் ஒரு பங்ளாதேஷி ஊழியர் என்றார் அவர். இந்தத் தரகர்கள் புகார்களைத் தவிர்ப்பதற்காக வங்கி பணமாற்றின்மூலம் தரகுப் பணத்தைப் பெறுவதில்லை என அவர் தெரிவித்தார்.

பங்ளாதேஷில் சம்பளம் குறைவாக இருப்பதால், பலரும் வீடுகளையும், நிலத்தையும், கடைகளையும் விற்று அல்லது வங்கியில் கடன் எடுத்து தரகர்களுக்குப் பணம் கொடுப்பதாகத் திஉ ஹுசேன் தெரிவித்தார். இருவருமே தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகத் தங்களது உண்மையான பெயர்களை வெளியிட விரும்பவில்லை. இந்த அறிக்கையின் தொடர்பில் கருத்துரைத்த மனிதவள அமைச்சு, 2016ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடையில் சட்டவிரோத வேலைத் தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சுமார் 350 வெளிநாட்டவர்களுக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தது.

உரிமம் இல்லாமல் வேலைத் தரகு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு $80,000 வரையிலான அபராதம், ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இத்தகைய குற்றத்தைப் புரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு, சிங்கப்பூரில் வேலை செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon