தமிழ் உள்ளிட்ட மொழி விருப்பப்பாடத்திட்டத்தில் அதிக மாணவர்கள் சேரலாம்

தமிழ் உள்ளிட்ட மொழி விருப்பப்பாடத்திட்டத்தில் அதிக மாணவர்கள் சேரலாம்

1 mins read
e051607c-0468-46b1-a6e3-24a5ceb0f921
ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில் தமிழ் வகுப்பு. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சீன, மலாய் அல்லது தமிழ் இலக்கியத்தை மாணவர்கள் பயிலும் ஈராண்டுத் திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து 15 உயர் நிலைப் பள்ளிகளுக்கு நீட்டிக்கப் படுகிறது. இதில் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு கல்விப் பயணங்கள், மொழி முகாம்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்வி அமைச்சர் ஓங் யி காங் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மொழி விருப்பப்பாடத் திட்டம் வழங்கப்படும் 15 உயர்நிலைப் பள்ளிகளில் மூன்றில் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் இடம்பெறும். காமன்வெல்த், ரிவர் சைட், ஈசூன் டவுன் ஆகியவையே அந்த மூன்று உயர்நிலைப் பள்ளிகள்.

உயர்நிலை இரண்டின் ஆண்டிறுதித் தேர்வில் தமிழில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். இத்திட்டத்தில் உள்ள எல்லா 'ஓ' நிலை மாணவர்களும் தங்கள் தாய்மொழியில் இலக்கியம் பயில்வார்கள். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி சார்ந்த பாடத்தைப் பயில்வார்கள்.

மொழி விருப்பப்பாடத் திட்டம் 1990ஆம் ஆண்டிலிருந்து சில தொடக்கக் கல்லூரிகளில் இடம் பெற்று வருகிறது. அது இப்போது தேசிய தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் அடுத்த ஆண்டில் இருந்து கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.